சைவ சித்தாந்தப் பரம்பரைகள் இரண்டு. ஒன்று தருமபுர ஆதீன பரம்பரை. மற்றொன்று இந்தச் சிவாக்கிர யோகிகள் பரம்பரை. சிவாக்கிர யோகிகள் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழிலும் வடமொழியிலும் நூல்கள் பல இயற்றியவர். இந்தச் சிறப்புப் பற்றி இவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்களை இவரது பெயரால் பரம்பரை எனக் குறிப்பிடலாயினர். இவருக்குச் சிவக்கொழுந்து சிவாசாரியார் என்ற பெயரும் உண்டு. இவர் வேளாளர் மரபில் வந்தவர்.
இந்தப் பரம்பரைக்கு வழங்கும் வேறு பெயர்கள்:
திருக்கயிலாய பரம்பரை - தரும்புர ஆதீனப் பரம்பரையும் இப்பெயரால் குறிப்பிடப்படும்.
கந்தனிடம் உபதேசம் பெற்றதால் 'கந்த பரம்பரை' வாமதேவர் மூலம் நிலவுலகில் தோன்றியமையால் வாமதேவ பரம்பரை சதாசிவ பரம்பரை - சதாசிவ சிவாசியார் உபதேசத்தால் பெற்ற பெயர்.
சந்தான வரிசை
இரண்டு பரம்பரைக்கும் உபதேசம் பெற்ற சந்தான வரிசை வேறு. இவர்கள் வாழையடி வாழையாக அவரவர் குருவிடம் ஞானம் பெற்றவர்கள்.
சூரியனார் கோயில் ஆதீனம்
சூரியனார் கோயிலுக்கு ஓர் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனம் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் சிவாக்கிர யோகியால் தோற்றுவிக்கப்பட்டது. இவருக்கு முன்னரும் இந்தக் கோயிலுக்குப் பரம்பரை உண்டு என்று காட்டுகின்றனர். 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பரம்பரை இன்றும் தொடர்கிறது. பரம்பரை வரிசை சில குறிப்புகளுடன் வரிசைப்படுத்தி இங்குக் காட்டப்படுகிறது.
ஸ்ரீ கண்ட பரமசிவம் |
கந்த சுவாமி |
வாமதேவ ரிசி |
நீலகண்ட சிவாசாரியர் |
விசுவேசுர சிவாசாரியர் |
சதாசிவ சிவாசாரியர் வடமொழியில் சிவஞானபோத விருத்தி எழுதியவர் (1450-1475) |
சிவமார்க்கப் பிரகாச சிவாசாரியர் (1475-1525) |
சிவக்கொழுந்து தேசிகர் (சிவாக்கிர யோகிகள்), ஆதீனம் நிறுவியவர், (1500-1550) |
வீழி சிவாக்கிர யோகிகள், பெரும்பெருஞ் சாத்திரங்கள் செய்தவர், (1550-1575) |
நந்தி சிவாக்கிர யோகிகள், சிவநெறிப் பிரகாச உரை, சிவப்பிரகாச உரை ஆகிய உரைநூல்களை இயற்றிவர் (1560-1600) |
சிவக்கொழுந்து தேசிகர் (1600-1640) |
சொக்கலிங்க தேசிகர், இவர் திருமாந்துறைப் பண்டார சந்நிதி (1640-1680) |
(இடையில் சில ஆண்டுகளில் ஏழு ஆசாரியர் பரம்பரைத் தலைமையை ஏற்றிருந்தனர். இவர்களில் அம்பலவாண தேசிகர் என்பவர் மட்டும் கேரளப் பிராமணர். ஏனையோர் அனைவரும் வேளாளர் குலத்தினர்) (1680-1688) |
முத்துக்குமார தேசிகர் (1888-1918) |
மீனாட்சி சுந்தர தேசிகர் - இவர் இறைஞான போதம் முதலான நூல்களை இயற்றியவர்.1973-ல் சமாதி அடைந்தவர் (1918-1947) |