• பிறப்பு: செப்டம்பர் 5, 1872
  • பிறந்த இடம்: ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா
  • இறப்பு: நவம்பர் 18, 1936 (அகவை 64)
  • வாழ்க்கைத் துணை: வள்ளி அம்மையார்(1885 -1900) , மீனாட்சி அம்மையார்
  • பிள்ளைகள்: உலகநாதன், ஆறுமுகம், சுப்பிரமணியன், வாலேசுவரன், ஞானம்பிகை,
  • வேதவல்லி, ஆனந்தவல்லி, மரகதவல்லி

வ.உ.சி வாழ்வை சித்தாிக்கும் படங்கள்

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை(V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

வாழ்க்கைச் சுருக்கம்
வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார். இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

பிறப்பு
வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம். ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் சைவ வெள்ளாளர் மரபில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

கல்வி
ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அரசாங்க அலுவலரான திரு.கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். பதினான்கு வயதில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குச் சென்று புனித சேவியர் பள்ளியிலும் கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார்.

வழக்கறிஞர் தொழில்
வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார். காவல் துறையினரால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி. யினால் விடுதலையானதால் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளானார். இச்சூழ்நிலையை விரும்பாத அவரது தந்தை வ.உ.சி.யை 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞரானார்.